In the Name of ALLAH
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ A Blended Articles - MOHAMED JAHANGIR'S Blog
Thursday, September 21, 2017
Tuesday, September 06, 2016
Thursday, March 31, 2011
தற்பெருமை
நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்டஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின்(இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.
நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே!சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசுவாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத்மிஷ்காத்)
Wednesday, January 19, 2011
கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..?
கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..? http://www.satyamargam.com/1625
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் 'ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து' எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை, அதற்குரிய தெளிவான அறிவை அல்லாஹ் நமக்கு வழங்கினாலேயொழிய!
Stephen Covey என்பவர் எழுதிய "The 7 Habits of Highly Effective People" என்ற நூலில் ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர். வேறு சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலை மிக அமைதியாக இருந்தது.
அப்போது ஒரு நபர் தனது குழந்தைகளுடன் அந்த ரயில் பெட்டியில் ஏறினார். ஸ்டீஃபனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அவர் 'அக்கடா' என அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அவரது குழந்தைகள் அவ்வாறு அமைதியாக உட்காரவில்லை. கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவதும், பொருட்களை எறிவதும், இதர பயணிகளின் செய்தித்தாள்களை இழுப்பதுமாக களேபரப் படுத்திக்கொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்த சூழ்நிலை சடாரென மாறிவிட்டது.
பயணிகள் அனைவருமே எரிச்சலடைந்தனர். 'உச்..உச்' என்று ஒலி எழுப்பினர். ஆனால் அந்த நபரோ ஒன்றுமே நடக்காதது போல கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார். குழந்தைகளை அதட்டவோ கட்டுப்படுத்தவோ அவர் எதுவும் செய்யவில்லை. ஸ்டீஃபனின் பொறுமை எல்லை கடந்தது. இந்த அளவிற்கு பொறுப்பற்றவராக ஒரு தந்தை இருக்க முடியுமா? என்ன மனிதர் இவர்? குழந்தைகளை கொஞ்சம் அதட்டினால் என்ன? இவ்வளவு சத்தமும் காதில் விழாதவரைப் போல கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருக்கிறாரே? ஸ்டீஃபனின் மனதில் அந்தத் தந்தையைப் பற்றிய paradigm உருவாகிக் கொண்டிருந்தது. அதற்கு அவர் கண்ணால் காணும் காட்சிகளும், காதில் விழும் சத்தங்களுமே ஆதாரம்!
பொறுமையிழந்த அவர் அந்த நபரின் தோளை தட்டி, "நண்பரே, உங்கள் குழந்தைகளை கொஞ்சம் அதட்டினால் என்ன? அவர்கள் இங்கிருக்கும் அனைவரையுமே தொந்தரவு செய்கின்றனரே?" என்றார். திடுக்கிட்டு கண்விழித்த அவர், சற்று நேரம் ஒன்றும் புரியாதவரைப் போல பார்த்துவிட்டு, "ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். நான் ஏதாவது செய்ய வேண்டும்தானே? எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளின் தாயான என் மனைவி சிறிது நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் இறந்து விட்டார். நாங்கள் அங்கிருந்துதான் வருகிறோம். இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று என் குழந்தைகளுக்கும் தெரியவில்லை போலிருக்கிறது." என்றார்.
ஸ்டீஃபன் திடுக்கிட்டுப் போனார். அந்தக் கணம் வரை அந்த நபரைப் பற்றி அவர் எழுப்பி வைத்திருந்த paradigm சடாரென நொறுங்கி விழுந்தது. அந்தத் தந்தையின் மீதும் அவரது குழந்தைகள் மீதும் பரிதாபம் தோன்றியது. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியது. அந்தக் குழந்தைகள் இன்னும் கூச்சலிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஸ்டீஃபனுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
சில கணங்களுக்கு முன்பு வரை அவர் அறியாமலிருந்து அப்போதுதான் அறிந்த ஒரு தகவல் அவரது மனதில் ஏற்பட்டிருந்த மனப்பிம்பத்தை நேரெதிராக மாற்றி விட்டது. இதை Paradigm Shift என்கிறார் ஸ்டீஃபன். ஸ்டீஃபன் அந்த நபரிடம் பேசாமலே இருந்தால், அல்லது அந்த நபர் தனது மனைவி இறந்த செய்தியை இவரிடம் சொல்லாமலே விட்டிருந்தால் என்னவாகி இருக்கும்? ஸ்டீஃபன் மனதில் ஏற்பட்டிருந்த Paradigm அப்படியே நிலைத்திருக்கும்!
இந்த Paradigm, Paradigm Shift எல்லாம் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேண்டுமானால் புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம். திருமறை குர்ஆனின் போதனைகளை மனதில் பதிய வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு இது புதிதானதல்ல.
"மனிதர்களிலேயே அதிகம் அறிந்தவர் யார்?" என்று இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம் வினவப்பட்டபோது அதற்கு அவர்கள் 'நான்' என்று பதில் அளித்தார்கள். 'அல்லாஹ்தான் மிக அறிந்தவன்' என்று தன் தூதருக்கு உணர்த்த விரும்பிய அல்லாஹ் 'இரு கடல்கள் சங்கமிக்கும் ஓர் இடத்தில் உம்மை விட அதிகம் அறிந்த ஓர் அடியார் இருக்கிறார்' என்று மூஸாவுக்கு வஹி அனுப் பினான்.
அல்லாஹ்விடமிருந்து பிரத்தியேக அருளையும் ஞானத்தையும் பெற்றிருந்த அந்த நல்லடியாரைச் சந்தித்து அவரது அனுமதியுடன் அவரோடு பயணிக்கிறார்கள் மூஸா (அலை) அவர்கள். அந்தப் பயணத்தின்போது அந்த நல்லடியார் செய்த சில செயல்கள் மூஸா (அலை) அவர்களுக்கு விசித்திரமானதாகத் தோன்றுகிறது.
அவர்கள் இருவரையும் சுமந்து சென்ற கப்பலை அந்த நல்லடியார் திடீரெனத் துளை போடத் தொடங்கினார். அதன் உரிமையாளரோ அவ்விருவரையும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதித்திருந்தார். அதற்காக அவருக்கு கைமாறு செய்வதற்கு நேர் எதிரான செயலில் அவர் இறங்கினார். அவரது செயல், கப்பலில் அமைதியாகப் பயணம் செய்து கொண்டிருந்த மக்களை மூழ்கச் செய்யக் காரணமாகிவிடுமோ என்று நபி மூஸா அவர்களுக்குத் தோன்றியது!
அடுத்ததாக, ஒன்றுமறியா சிறுவன் ஒருவனை அந்த நல்லடியார் கொலை செய்கிறார். அவனோ அவனுடைய தாய் தந்தையரோ மூஸாவுக்கும் அவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்திருக்கவில்லை.
அதற்கும் அடுத்ததாக, ஒரு ஊரில் கீழே விழவிருந்த சுவர் ஒன்றை அந்த நல்லடியார் சரி செய்து நிறுத்துகிறார். அதற்குக் கூலி எதுவும் வாங்கவில்லை. அவ்வூர் மக்கள் அவ்விருவருக்கும் விருந்து அளித்து உபசரிக்கவில்லை. அவர்களின் தகுதி அறிந்து நடந்து கொள்ளவில்லை. இருந்தும் அவர்களுக்கு அவர் உபகாரம் செய்வதுபோல நடந்துக் கொள்கிறார்.
இந்தச் சம்பவங்கள் மூஸா நபிக்கு ஆச்சரியத்தையும் திகிலையும் ஏற்படுத்துகின்றன. பொறுமை இழந்தவர்களாக ஒரு முறைக்குப் பலமுறை ஆட்சேபிக்கவும் கேள்வி கேட்கவும் அவர்களைத் தூண்டுகின்றன.
'என்ன மனிதர் இவர்? உதவி செய்த கப்பலின் உரிமையாளருக்கு கைமாறு செய்வதற்குப் பதிலாக நன்றி கொன்றவராக நடந்துக் கொள்கிறார்? அழகிய அந்தச் சிறுவனிடம் அன்பு செலுத்துவதற்குப் பதிலாக அவனைக் கொன்று விட்டார். ஆனால் எவ்வித உதவியும் செய்யத் தகுதியற்ற அவ்வூர் மக்களின் உடைமைகளைப் பாதுகாக்க ஆவல் கொள்கிறார்?' அந்த நல்லடியாரைப் பற்றி மூஸா (அலை) அவர்களின் மனதில் தோன்றிய மனப்பிம்பங்கள் (Paradigm) இவை!
இறைத்தூதராகிய ரோஷமிக்கவரான மூஸா நபி அவர்களால் இந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. "இன்ஷா அல்லாஹ், நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்" என்று தாம் முன்பு அளித்த வாக்குறுதியையும் மறந்து விடுகிறார். தமது மறுப்பையும் ஆட்சேபனையையும் வெளிப்படுத்தி அவசர அவசரமாக அது பற்றி வினா தொடுக்கிறார்: "மிகவும் தீயதொரு செயலை நீர் செய்துவிட்டீரே!" (சூரத்துல் கஹ்ஃப் 74). அதற்கு அந்த நல்லடியார் அளித்த பதில்கள் மூஸா (அலை) அவர்கல் மனதில் ஏற்பட்டிருந்த மனப்பிம்பத்தை உடைத்து 'Paradigm Shift'-ஐ ஏற்படுத்துகிறது.
மூஸா (அலை) அவர்களுக்கோ வேறெவருக்குமோ அளித்திராத ஞானத்தை அந்த நல்லடியாருக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனைக் கொண்டு அந்த மூன்று நடவடிக்கைகளிலும் அவர் நுண்ணறிவோடு மிகச்சரியாகவேதான் செயல்பட்டுள்ளார். உபகாரம் செய்ய வேண்டிய இடத்தில் உபத்திரம் செய்யவில்லை. உபத்திரத்திற்குப் பதில் உபகாரம் செய்திடவில்லை.
கப்பலில் துளை போட்டு அதன் மூலம் கப்பலின் உரிமையாளருக்கு உபகாரம்தான் செய்தார்கள். அபகரிக்கப்படுவதில் இருந்து கப்பலைப் பாதுகாத்தார்கள். ஏனெனில் அந்தப் பகுதியில் - அந்தக் கரையில் ஓர் அரசன் இருந்தான். குறையேதுமில்லாத நல்ல கப்பல்களையெல்லாம் அபகரித்துக் கொண்டிருந்தான். அதனால்தான் (கப்பலைத் துளைபோட்டு அதனை அபகரிக்காதவாறு பாதுகாத்து) அதன் உரிமையாளரின்
உபகாரத்திற்கும் உதவிக்கும் கைமாறு செய்தார் அந்த நல்லடியார்!
சிறுவனைக் கொலை செய்ததன் மூலம் அவனுடைய தாய் தந்தையருக்கு அவர் உபகாரம் செய்தார். "(அவர் கூறினார்) அந்தச் சிறுவனின் விஷயம் என்னவெனில், அவனுடைய தாய் தந்தையர் இருவரும் நம்பிக்கையாளராக இருந்தனர். அவன் தனது அத்துமீறலாலும் நிராகரிப்பினாலும் அவ்விருவருக்கும் சிரமம் கொடுப்பானோ என்று நாம் அஞ்சினோம். ஆகையால் அவர்களுடைய இறைவன் அச்சிறுவனுக்கு பதிலாக அவனை விடவும் சிறந்த - குடும்ப உறவுகளைப் பேணக்கூடிய பிள்ளைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென நாம் விரும்பினோம்" (சூரத்துல் கஹ்ஃப் 80–81)
கீழே விழும் நிலையிலிருந்த "அந்தச் சுவரின் விஷயம் யாதெனில், அது அந்த ஊரிலிருந்த இரு அநாதைச் சிறுவர்களுக்குரியது. அதன் அடியில் அவர்களுக்குரிய புதையல் ஒன்று இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்ல மனிதராக இருந்தார். ஆகவே அவ்விருவரும் தம் வாலிபத்தை அடைய வேண்டும் என்றும் தங்களது புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உம் இறைவன் நாடினான். இது உம் இறைவன் புரிந்த அருளாகும். இவற்றையெல்லாம் எனது அதிகாரத்தின்படி நான் செய்யவில்லை. (அல்லாஹ்வின் ஆணையின் பேரில்தான் செய்தேன்) உம்மால் பொறுமை கொள்ள முடியாதிருந்த விஷயங்களின் உண்மை நிலை இதுதான்" (சூரத்துல் தஹ்ஃப் 82) என அந்த நல்லடியார் விளக்கினார்.
திருமறைக் குர் ஆனின் 'குகை' அத்தியாயத்தில் (சூரா கஹ்ஃப்) கூறப்பட்டிருக்கும் இச்சம்பவத்தின் மூலம் தெரியும் உண்மையாதெனில், இறைத்தூதராகவே இருந்தால்கூட மனித அறிவு என்பது முழுமையானதல்ல. அல்லாஹ் எந்த ஞானத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று நாடுகிறானோ அவருக்கே அதை உரிய நேரத்தில் அளிக்கிறான். அறியாமலிருந்த தத்துவங்கள் வெளிப்படும்பொழுது எத்துணை ஆச்சரியம்! புற வடிவத்திற்கும் யதார்த்த நிலைக்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி! உண்மை இவ்வாறிருக்க, சில மனிதர்கள் தமது அரைகுறை ஞானத்தை வைத்துக்கொண்டு, எல்லாம் அறிந்தவர்கள் போல எப்படித்தான் வாதாடுகிறார்களோ!! தம்மிடம் உள்ள சிற்றறிவைக் கொண்டு பிறரை 'பொய்யர்' 'கள்ளப் பேர்வழி' 'வேஷதாரி' 'போலி' என்றெல்லாம் பழிப்பதற்கு இவர்களுக்கு எங்கிருந்துதான் துணிவு வருகிறதோ!!
இந்த உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காலம் தோறும், ஒவ்வொரு காலத்திலும் காலத்துக்கேற்ப புதிய நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். நாள் தோறும் தனது ஆச்சரியங்களை அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தன்னுடைய இரகசியங்களை அது தொடர்ந்து வெளிப்டுத்திக் கொண்டிருக்கிறது! மனித அறிவிற்கு முடிவே கிடையாது. அறிவின் இறுதிநிலை நமது சக்தியை விட்டும் வெகு தொலைவில் உள்ளது. மனிதர்களில் எல்லாம் அறிந்தவர்கள் என்று எவரும் கிடையாது.
"கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!" (சூரா யூசுப் 76)சிந்தனை: இப்னு பஷீர்
Monday, December 13, 2010
வேலைவாய்ப்புகளைக் குவிக்கப் போகும் அரபு நாடுகள்
சவூதி அரேபியாவில் முதன்முதலாக தமாம் நகரில் 1939-ல் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற காலத்தில் உலகில் இனி பொருளாதார ரீதியாக மாபெரும் புரட்சி ஏற்படப் போகிறது என்பதைச் சொன்ன போது அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்க வல்லரசு மத்திய கிழக்கில் ஏற்படப் போகும் இந்தப் பொருளாதாரப் பிரளயத்தை, அரபு மண்ணிலிருந்து பீறிட்டு எழப்போகும் இந்த கருப்புத் தங்கத்தை முன்கூட்டியே புரிந்து கொண்டு, முந்திக் கொண்டு சவூதி ஆட்சியாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது.
பூமியிலிருந்து எண்ணெய் வெளியே எடுக்கப்பட்ட செய்தி வெளி உலகிற்குச் சென்றவுடன் உலகின் பெரு முதலாளிகள் அனைவரின் பார்வையும் அரபு நாடுகள் மீது விழுந்தது.
1950-க்குப் பிறகு அடுத்து வந்த 25 ஆண்டுகளில் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வுப் பொருட்களில் ஏறக்குறைய முக்கால்வாசிப் பொருட்கள் அரபு நாடுகளை மையப்படுத்தியே உற்பத்தி செய்யப்பட்டன. உலகிலேயே வாங்கும் திறன் படைத்த மக்கள் அதிகம் வாழும் பகுதியாக அரபு நாடுகள் மாறிப்போயின. எண்ணெய் விற்பனை மூலம் பெறப்பட்ட அபரிமிதமான வருவாய் வளைகுடா நாடுகள் என்று சொல்லப்படும் 6 அரபு நாடுகளில் வாழும் மக்களின் மனோபாவத்தையும் வாழ்க்கைச் சூழலையும் அடியோடு மாற்றியது.
இன்று உலக கச்சா எண்ணெய் வளத்தில் 56% மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சவூதி அரேபியா உலகின் முதன்மை நாடாகத் திகழ்கிறது.
1960களில் எண்ணெய் விற்பனை இலாபம் அதிகப்படியாக வரத் தொடங்கியபோது அரபு பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளும் வர்த்தக நிறுவனங்களும் பெருகத் தொடங்கின. அதில் பணியாற்றுவதற்கு அதிகப்படியான தொழிலாளர்கள், மனிதவளம் தேவைப்பட்டது. தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் அரபு நாடுகள் பற்றிய செய்திகள் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. மலையாளிகள் முந்திக் கொண்டனர். அரபு நாடுகளோடு அவர்களுக்கு இருந்த வரலாற்று ரீதியான தொடர்பும் அவர்களின் அரபு மொழிப் புலமையும் வெகு விரைவாக மலையாளிகள் அரபு நாடுகளுக்கு புலம் பெயர்ந்திட வாய்ப்பை பெருமளவு ஏற்படுத்தித் தந்தது.
தமிழகத்தில் கல்வி கற்று அரசு வேலை வாய்ப்பு பெற ஆர்வம் இன்மையாலும் மேலும் அரசுப் பள்ளிகளில் முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமையாலும் ஏற்பட்ட சிக்கலால் 1965க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரபு நாடுகளுக்கு பொருளீட்டச் செல்லும் வழக்கம் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் அரபு நாடுகளில் செல்வம் பெருகப் பெருக பாலைவனங்களிலும் மணற்கோட்டைகளிலும் வாழ்ந்த அரபு மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள கட்டமைப்பு பணிகளில் கவனம் செலுத்தினர். அதனால் கட்டமைப்புப் பணிகளில் பணியாற்றிட தொழிலாளர்கள் அதிகம் தேவைப்பட்டனர். உடல் உழைப்பைச் செய்யும் திறன் வாய்ந்த இளைஞர்கள் பெருமளவில் அரபு மண்ணை நோக்கிச் செல்ல தொடங்கினர். பல ஆயிரம் ரூபாய் விசாவிற்கு பணம் கொடுத்துச் சென்றனர். அதில் சிலர் ஏமாந்து அனைத்தையும் இழந்து ஊர் திரும்பினர். ஆனாலும் அரபு நாடுகளுக்கான போக்குவரத்து நாடுக்கு நாள் பெருக தொடங்கியது.
அரபு மண்ணில் கச்சா எண்ணெய் உற்பத்தி மேலும் பெருகப் பெருக, செல்வம் வந்து சேரச் சேர அரபு மக்களிடையே வசதிவாய்ப்புகள் மற்றும் வெளிநாடுகளின் தொடர்புகள் அதிகரித்தன. வெளிஉலகத்திற்கான விமானப் போக்குவரத்து அதிகரித்தன. அரபு மக்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் பயணம் மேற்கொண்டனர். அதன் காரணமாக மேலை நாட்டு மக்களின் மேற்கத்திய வாழ்வியல் வழிமுறைகளின் தாக்கம் ஏற்பட்டது. 1980க்குப் பிறகு உலக நாடுகளோடு போட்டி போட்டு அரபு நாடுகள் பொருளாதார ரீதியாக வளரத்தொடங்கிய போது நவீன அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினர். அந்த நேரத்தில் நிதி மற்றும் மேலாண்மை தொடர்பாக படித்த பட்டதாரிகளும் பல துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களும் அரபு நாடுகளுக்குத் தேவைப்பட்டனர். இந்தச் செய்திகள் உலகம் முழுவதும் பரவியது. அந்த நேரத்தில் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரபு நாட்டு மோகம் உச்சத்தைத் தொட்டது. தொடக்க காலத்தில் படிக்காமலேயே – பட்டம் பெறாமலேயே உடல் உழைப்பைக் கொடுத்து தமிழகத்திலிருந்துச் சென்றவர்கள் பெற்ற ஊதியம் இந்தியாவில் அந்த நேரத்தில் முதுநிலை பட்டதாரிகள் பெற்ற ஊதியத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஆனால் 1980-க்குப் பிறகு அரபு நாடுகளின் தேவை மாறி வருவதையும் மக்களின் மனநிலை மாறி வருவதையும் அரபு நாடுகளின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முதலீடுகள் எப்படி அமையப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதற்கேற்ப தங்களை தயார் செய்யாமல் தமிழக முஸ்லிம் சமூகம் வழக்கம் போல் அலட்சியம் செய்தது.
படித்து பட்டம் பெற்று நிர்வாகத் திறன் படைத்தவர்களாகவும் தொழில் நுட்ப வல்லுனர்களாகவும் தரம் உயர்த்திக் கொண்டு செல்ல வேண்டிய தமிழக முஸ்லிம் சமூகம் படிக்காமலேயே கிடைக்கும் பொருளாதாரத்தில் இருந்த மோகத்தின் காரணமாக மாபெரும் தவறிழைத்தது. மனித ஆற்றலை மேம்படுத்தி தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற்றும் தன்மையுடைய கல்வியை பாதியில் விட்டுவிட்டு எவ்வளவு சீக்கிரம் பாஸ்போர்ட் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொண்டு குடியிருந்த வீட்டை, நகையை, நிலத்தை என அனைத்தையும் அடகு வைத்து அல்லது விற்றுவிட்டு ஏஜென்டுகளிடம் கொடுத்து அரபு நாடுகளை நோக்கி தாறுமாறாக ஓடியது. அதேநேரத்தில் இந்தியாவில் படித்து பட்டம் பெற்ற சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாறி வந்த அரபு உலகத்தின் தேவையைச் சரியாக கணித்து, சிந்தித்து அதற்கேற்ப தங்களின் திறன்களை வளர்த்துக் கொண்டு அரபு நாடுகளின் அரசு நிர்வாகத்திற்கும் பெருகி வந்த தொழிற்சாலைகளுக்கும் நிதியை ஆளுமை செய்யக்கூடிய உயர் பொறுப்புகளுக்கும் பணி நியமனம் பெற்று குடும்பத்தோடு சகல விதமான சலுகைகளோடு சென்றனர்.
அதே வேளை கல்வியின் தன்மை உணராத முஸ்லிம் சமூக இளைஞர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லேபர் வேலை செய்திட பைத்தியம் பிடித்து ஓடினார்கள். திருமணம் ஆன ஒரு மாதம், இரண்டு மாதம் என்று வாழ்க்கையின் அபூர்வமான விழுமங்களை காசிற்காக காற்றில் பறக்கவிட்டு ஓடினார்கள். இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் என்று கட்டிய இளம் வயது மனைவியையும் பிள்ளைகளையும் தவிக்க விட்டு தன்நிலை உணராது ஓடினார்கள். இஸ்லாமிய மார்க்கம் தடை செய்த போதும் ஓடினார்கள். இதனால் சில ஊர்களில் சில நல்ல குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமானது. முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பல அறிஞர் பெருமக்கள் பெருகி வந்த இந்த விபரீதத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொண்டை கிழிய தெருத்தெருவாக கத்தினார்கள். ஆனாலும் தடுத்திட முடியவில்லை. கடந்த 35 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த இந்த மோகம், இந்த போதை தலைக்கு ஏறி தற்சமயம் அரபு நாட்டை விட்டால் சம்பாதிக்க வேறு வழியில்லை என்ற அளவிற்கு மனநிலை உருவாகி அதற்கே முழுதாக அடிமைப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிட்டது.
பல வருடங்கள் பிரிந்து வாழ்ந்ததின் விளைவாக கணவன் மனைவி இடையே கருத்து முரண்பாடுகளும் கட்டுப்படாத பிள்ளைகளுமாய் பல குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களை அனுபவித்து வருகின்றன. குறிப்பாக கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் இதனால் எல்லையில்லாத மனவேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர். கூடுதல் சம்பாத்தியம் என்ற ஒரே காரணத்திற்காக வாழ்க்கை என்கிற உன்னதமான உயிர்ப்புள்ள ஜீவனை தொலைத்துவிட்டனர். பிழைப்பிற்காக வாழ்க்கையைத் தொலைத்தனர்.
தாங்களாக மாற்றிக் கொண்ட சொகுசு வாழ்க்கை முறைக்கு ஏற்ப வசதி வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளத் தேவைப்படும் பொருளாதாரம் குடும்பத்தை விட்டுவிட்டு அரபு நாடுகள் சென்றால் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கை தொலைந்தாலும் பரவாயில்லை என்ற அளவிற்கு மார்க்கத்தின் பாதுகாப்பு வட்டத்தை விட்டும் இந்த மக்களை வெளியேற வைத்தது நுகர்வு கலாச்சாரம்.
இறைவனும் இறைதூதரும் வகுத்துத்தந்த அற்புதமான வாழ்வியல் கோட்பாட்டை உடைத்தெறிந்தனர்.
புரையோடிப் போய் உள்ள இந்த வாழ்வியல் சீர்கேட்டிற்குத் தீர்வு கண்டாக வேண்டும். ஒரு தலைமுறை அறியாமையால் செய்த தவறை அடுத்த தலைமுறையும் செய்ய அனுமதிக்கக்கூடாது.
தலைமுறை தலைமுறையாக சமூகத்தில் தவறுகள் நடக்கிறது என்றால் தலைமைத்துவம் சரியில்லை என்பது நிருபணம் ஆகும்.
என்னதான் மாற்று?
வளைகுடா நாடுகளின் வளம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து 2020களில் அரபு மண்ணில் ஏற்படப் போகும் பொருளாதார பூகம்பம் பற்றி உலக வர்த்தக அமைப்பும் (கீஜிளி) உலக வங்கியின் ஆய்வறிக்கையும் பல பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளும் இனி அடுத்து வரும் 20-30 ஆண்டுகளில் வளைகுடா நாடுகள் உலகில் அசைக்க முடியாத பொருளாதார சக்திகளாகப் பரிணமிக்க இருக்கின்றன என்கிற தகவலை வயிற்றெரிச்சலுடன் வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் அரசியல் ரீதியாகப் பல நெருக்கடிகள் சூழ்ந்து இருந்தாலும்கூட அதையெல்லாம் தாண்டி வளம் நிறைந்த பகுதிகளாகவும் புதிய வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் நிலப்பகுதிகளாகவும் உருவெடுக்க இருக்கின்றன.
21ஆம் நூற்றாண்டிற்கான அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் ஏற்படப் போகும் ஒரு மாற்றத்திற்காக அரபு நாடுகள் தயாராகி வருகின்றன. இனி அரபு நாடுகள் காணப்போகும் மிகப்பெரும் பொருளாதார மாற்றத்தின் பலன்கள் முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பெற இதோ எளிமையான வழிகள்.
இப்போது அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக செல்ல வேண்டும்! ஆனால், முன்பு சென்றது போல் அல்லாமல் கட்டிய மனைவியையும்குழந்தைகளையும் கையோடு கூட்டிச் செல்ல வேண்டும். சென்ற தலைமுறை இழந்த உன்னதமான வாழ்வை இந்தத் தலைமுறையாவது பெற்றிட இன்றே தயாரிப்புகளைத் துவங்கி இனியாவது குடும்பத்தோடு அரபு நாடுகளில் குடியேறுவோம்.
அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்வோம். அறிவும் ஆற்றலுமிக்க தொழில்நுட்ப வல்லுனர்களாக, மிகச்சிறந்த நிர்வாகத் திறன் பெற்றவர்களாக மாறி வரும் அரபுலகின் தேவையறிந்து அதற்கேற்ற வல்லுனர்களாக நமது அடுத்த தலைமுறையை மாற்றிடுவோம்.
தற்போதைய உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் கூட துபாய் தவிர்த்த பிற அரபு நாடுகள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. துபாயில் கூட கட்டுமானத் துறையும் அதோடு தொடர்புடைய துறைகளும்தான் வீழ்ச்சியைச் சந்தித்தன.
கட்டுமானத் துறை சார்ந்த வேலைகள் அதிகம் நடைபெற்றதால் பெரிய பாதிப்பு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இது மாறி வருகிறது.
CMN சலீம்
Tuesday, December 07, 2010
வங்கி மைனஸ் வட்டி - Part 1
நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.
நன்றி: தமிழ்பேப்பர்.நெட்
Source: http://www.tamilpaper.net/?p=555
Monday, December 06, 2010
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்
இந்த திறந்த நிலைபளள்ளிக்கு நாடுமுழுவுதும் பதினொரு முக்கிய நகரங்களில் மையங்கள் செய்படுகின்றன. இது தவிர - 3367 பயிற்சி மையங்கள் உள்ளன. தற்போது இந்தகல்வி நிலையத்தில் உயர்நிலை, மேல்நிலை கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 15 லட்சம்.
யார் யார் சேரலாம்?பள்ளியில் இடைநின்ற மாணவர்கள், பள்ளியில் படிக்காத மாணவர்கள் இங்கே தொலை நிலைக்கல்வி மூலம் படிக்கலாம். வயது 14பூர்த்தியாகியிருந்தால் போதும். இங்கே பத்தாம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு,தொழிற்படிப்பு, ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற தனிப்பட்ட செல்ப் இம்ப்ரூவ்மெண்ட் பயிற்சிகளும் அளிக்கபடுகின்றன. பத்தாம் வகுப்பு படிக்க விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபடசம் ஐந்து பாடங்களை கண்டிப்பாக படித்தாக வேண்டும். இதில் குரூப் ஏ,குரூப் பி. என்னும் இரண்டுபிரிவுகள் உள்ளன. குரூப் ஏ வில் தமிழ், தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி, உட்பட 17 - மொழிப்பாடங்கள் உள்ளன. மாணவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தையோ, இரண்டு மொழி பாடங்களையோ தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
எட்டாம்வகுப்பு படித்துவிட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக எலக்ட்ரீஷியன், பிளம்பர்,மெக்கானிக்கல் போன்ற தொழில்களை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தங்கள் தொழில் சார்ந்த சான்றிதழ் இருக்காது. அதனால் அவர்கள் கடைசிவரை அரசுப் பணிக்கோ, பொதுத்துறை நிறுவனங்களுக்கோ பணிக்கு செல்ல முடியாது. ஆனால் இந்த கல்வி நிலையத்தில் திறந்த நிலை படிப்பாக ஆறு மாத பயிற்சி, ஒரு ஆண்டுப் பயிற்சி மற்றும் குறைந்த வார பயிற்சிகளாக பல தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏற்கனவே தொழில் தெரிந்திருக்கும் மாணவர்களும், தொழில் அறிவு இல்லாத மாணவர்களும் இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாண்டு பயிற்சியாக டிப்ளமோ இன் ரேடியோலாஜி படிப்பு கற்று கொடுக்கப்படுகிறது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தவிர கிராம சுகாதாரம், மகளிர் மேம்பாடு குறித்த சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க நான்காம் வகுப்பு படித்திருந்தால்போதுமானது. இது தவிர ஆறு மாத கால பயிற்சியாக எலக்ட்ரிக்கல்,மோட்டார் ரீவைண்டிங், ரேடியோ பழுதுபார்த்தல், உடை தயாரித்தல், அழகு பயிற்சி போன்றவை கற்று தரப்படுகின்றன. இந்த பயற்சிக்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இதே போல டி.டி.பி. மற்றும் கணினி ஹார்டுவேர் 6 மாத பயிற்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். குறைந்த கட்டணம், நிறைந்த கல்வி, கல்வி நிலையங்களுக்கு சென்று படிக்க வேண்டியதில்லை. புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வரும். வேலைவாய்ப்பு அதிகமுள்ள தொழிற்கல்வி,இவை அனைத்தையும் மொத்தமாக வழங்கும் சிறந்தஒரு திறந்தவெளி பள்ளியாக செயல்படுகிறது --------------------------