Saturday, December 29, 2007

கிறிஸ்மஸ் விழாக்களுக்கு வாழ்த்துவது வாழ்த்து அனுப்புவது இஸ்லாத்திற்கு எதிரான நிகழ்வாகும்




இஸ்லாத்தில் நடிப்பதற்கு அனுமதியில்லை. மற்ற கொள்கைகளுடன் இஸ்லாமிய கொள்கையை அனுசரித்து சமரசம் செய்துக் கொள்வதற்கும் அனுமதியில்லை. இயேசு என்ற இறைத் தூதரை கொஞ்சமும் அச்சமில்லாமல் இறைவனின் மகன் என்று வர்ணித்து அதற்காக கிறித்தவர்கள் பிறந்தநாள் (புத்தாண்டு) விழா கொண்டாடுகிறார்கள் (சரித்திர ரீதியாக இயேசு பிறந்த தேதி - மாதம் - வருடம் பாதுகாப்பாக பதிவு செய்யப்படவில்லை. கி - பி என்பது குத்துமதிப்பான கணக்கு தான்) இயேசுவை இறைமகனாக வர்ணிப்பதை இஸ்லாம் மிக வண்மையாக கண்டிக்கிறது.
இஸ்லாம் கண்டிக்கும் ஒரு காரியம் நடக்கும் போது அதற்கு முஸ்லிம் வாழ்த்து சொன்னால் என்ன அர்த்தம்? இஸ்லாமிய கொள்கையில் அவருக்கு தெளிவும் பிடிப்பும் இல்லை என்பதை தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது.
இறைவன் கண்டித்த ஒரு குற்றம் நடக்கும் போது அதை விவேகத்துடனும் - துணிச்சலுடனும் எடுத்துக் கூற கடமைப்பட்ட முஸ்லிம் அதற்கு நேர் மாற்றமாக அந்த குற்றத்திற்கு வாழ்த்து சொல்வது மேலும் அந்த குற்றத்தை அங்கீகரிப்பதற்கு அடையாளமாகாதா...தீபாவளி - கிறிஸ்மஸ் - பொங்கல் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் இணக்கமோ, நெருக்கமோ, புரிந்துக் கொள்ளும் மனப்பான்மையோ வளரப்போவதில்லை.
நாங்களும் நீங்களும் ஒன்றுதான் என்று எம்மதமும் சம்மதம் என்ற முட்டாள் தனமான கொள்கையில் இணையும் நிலைதான் ஏற்படும். கொள்கைத் தெளிவு - உறுதி இதன் வழியாகத்தான் நட்பைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்கள் இது போன்ற விழாக்களுக்கு வாழ்த்துக்கள் கூறக் கூடாது என்பது தான் சரியாகும். வாழ்த்து அட்டைக் கலாச்சாரம் அபத்தமானதாகும்.
அல்லாஹ்வுக்கு ஒரு மகன் இருக்கின்றான் என்ற கிறித்தவர்களின் அபாண்டமான சொல்லுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முஸ்லிம்கள்!!! கிறித்தவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இன்று முஸ்லிம்களே முன்னின்று நடத்தும் அவலம்!


எந்த ஒரு சொல்லை அவர்கள் கூறியதால் வானம் இடிந்து மலைகள் வெடித்துச் சிதறுண்டு பூமி நொறுங்கித் தவிடுபொடியாகும் அளவுக்கு மிகப் பெரிய அபாண்டம் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அத்தகைய சொல்லுக்குத் தூபம் போட்டு வரவேற்கும் முஸ்லிம்கள்!!! அவர்கள் நமக்கு பெருநாள் வாழ்த்து கூறுகின்றார்கள் அவர்களுக்கு நாம் வாழ்த்துக் கூறாமல் இருந்தால் அவர்கள் மனவேதனைப்படுவார்களே என்ற மன உறுத்தல் அவர்களோடு நெருங்கிப் பழகும் பல முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. ஒன்றை அவர்கள் புரிந்துக் கொண்டால் இந்த உறுத்தலிலிருந்து விடுபட்டு விடுவார்கள்.
ஒரு முஸ்லிமிடமோ ஒரு கிறிஸ்த்தவரிடமோ அல்லது இன்ன பிறரிடமோ நமக்கு ஏற்படும் நட்பு அந்த நட்பால் ஏற்படும் பழக்கவழக்கம் நம்மை இறைவனின் சாபத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியதாக இருந்தால் அத்தகைய நட்பையும் பழக்க வழக்கத்தையும் அறவே நாம் ஒழித்தாக வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அதிலிருந்து நாம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம் என்ற அடையாளத்தை இழந்து இயேசுவை இறைமகனாக்கி சந்தோஷித்து வழிபடும் கிறிஸ்த்தவர்களோடு சேர்ந்து 'நானும் உங்கள் கொள்கைக்காரன்தான்' என்ற தோரணையில் வாழ்த்து சொல்லி இறைவனிடம் குற்றவாளியாக தலைகுணிந்து நிற்கும் அபாயத்தை விட இந்த போலி பாசாங்குகளை உடைத்தெறிந்து வாழ்வது எவ்வளவோ மேல்.
இஸ்லாமிய கொள்கையை விளங்கிய எந்த கிறிஸ்த்தவரும் முஸ்லிம்கள் வாழ்த்து சொல்லா விட்டால் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதை முதலில் முஸ்லிம்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا
مَّا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا

'அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளினான்.இவர்களுக்கும், அவர்களின் முன்னோருக்கும் இது பற்றி எந்த அறிவும் இல்லை. அவர்களின் வாய்களில் வெளியாகும் சொற்களில் இது பெரிதாகும். அவர்கள் பொய்யையே கூறுகின்றனர். (அல் குர்ஆன் 18:4-5)

بَدِيعُ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 6:101)

قُلْ إِن كَانَ لِلرَّحْمَنِ وَلَدٌ فَأَنَا أَوَّلُ الْعَابِدِينَ
"அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!" என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன் 43:81)

இந்த குர்ஆன் வசனங்களை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்குக் கூட கிறிஸ்த்தவர்களின் முக்கடவுள் கொள்கை இஸ்லாத்திற்கு எத்துனை தூரம் முரணானது என்பது விளங்கி விடும். இஸ்லாத்தில் மிக மிகப் பெரும் குற்றமாக கருதப்படுவது இறைவனுக்கு இணை துணை கற்பிப்பதாகும். எல்லாவற்றிலும் தனித்து விளங்கும் ஏக இறைவனுக்கு மகனுண்டு என்று கூறி அந்த மகனையே கடவுளாக வணங்கி வரும் ஒரு பெரும் பாவம் நிகழ்ந்து வரும் வேலையில் அந்த மகனுக்கு பிறந்தநாள் விழா எடுக்கின்ற போது ஏக இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம் எந்த விதத்திலாவது அதை சரிகாண முடியுமா...? என்ற கேள்வியை முஸ்லிம்களிடம் முன் வைக்கிறோம்.மார்க்கத்திற்கு முரணானவை நடக்கக் கண்டால் கரத்தால் தடுப்பதும் நாவால் அந்தத் தீமையை சுட்டிக் காட்டுவதும் இரண்டுக்கும் இயலாத நிலையில் மனதால் வெறுப்பதும் இறை நம்பிக்கையின் படிதரங்களாகும். கரத்தாலும் தடுக்காமல், நாவாலும் சுட்டிக்காட்டாமல், மனதாலும் வெறுக்காமல் இருப்பதோடு மட்டுமின்றி அந்த காரியத்திற்கு ஆதாரவு தெரிவித்து ஊக்கமளித்தால் ஆதரவளிப்பவர் அந்த அபாயத்திற்குள் நுழைகிறார் என்பது பொருள்.முஸ்லிம்களே... ஈமானுடன் வாழ்ந்து ஈமானுடன்
மரணிப்பதுதான் வாழ்க்கையிலேயே மிக உயர்ந்த உன்னதமான வாழ்க்கையாகும் வருடத்தின் இறுதிவரை ஈமானை பாதுகாத்து வாழும் நாம் கிறிஸ்மஸ் போன்ற ஓரிரு நாள் விழாக்களில் பாதுகாத்து வந்த ஈமானை இழந்து நிற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கிறிஸ்த்தவர்களுடன் உறவு பாராட்டுங்கள், ஒற்றுமையாக இருங்கள் அந்த ஒற்றுமைக்கும் உறவுக்கும் கோடிட்டு வழிகாட்டுவது உங்கள் ஈமானாக இருக்க வேண்டும் மறந்து விடாதீர்கள்.கிறிஸ்மஸ் விழாக்களுக்கு வாழ்த்துவது வாழ்த்து அனுப்புவது இஸ்லாத்திற்கு எதிரான அபாயகரமான நிகழ்வாகும்.